Home Gallery Celebrities காற்றில் கலந்தார் பின்னணிப் பாடகி உமா ரமணன்!

காற்றில் கலந்தார் பின்னணிப் பாடகி உமா ரமணன்!

பாரதி ராஜா இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ‘நிழல்கள்’. இத்திரைப்படத்தில் ராஜசேகரன்,வாகை சந்திரசேகர்,’நிழல்கள்’ரவி, சுவிதா, ரோகிணி,மணிவண்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்தில் அறிமுகமானதால் தான் ‘ரவி’ அவர்களுக்கு ‘நிழல்கள்’ரவி என்ற அடைமொழி வந்தது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப்பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. குறிப்பாக ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ என்ற பாடல் இன்றளவிலும் பலராலும் விரும்பக்கூடிய பாடலாகும். இத்திரைப்படத்தில் இடம்பெற்று மாபெரும் வெற்றிபெற்ற இன்னொரு பாடலான ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் உமா ரமணன் அறிமுகமானார்.இவர் சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த உமா ரமணன் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 69.

‘ஆனந்த ராகம் கேட்கும் காலம்’,’ஆகாய வெண்ணிலாவே’,’ஆசை ராஜா ஆரிராரோ’,’பூபாலம் இசைக்கும்’, ‘செவ்வந்தி பூக்களில்’, ‘கஸ்தூரி மானே’,’மேகம் கருக்கையிலே’,’ஆகாய வெண்ணிலவே’,’வெள்ளி நிலவே’ போன்ற இவரது பாடல்கள் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது.

கடைசியாக விஜய் நடித்த ‘திருப்பாச்சி’ திரைப்படத்தில்,’கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு’ மற்றும் ‘சிவகாசி’ திரைப்படத்தில் ‘இது என்ன’ என்ற பாடலை பாடியிருந்தார் உமா ரமணன்.எம்.எஸ் விஸ்வநாதன்,இளையராஜா,கங்கை அமரன்,ஷங்கர் கணேஷ், எஸ்.ஏ ராஜ்குமார், தேவா, வித்யாசாகர், ஸ்ரீகாந்த் தேவா என பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்களைப் பாடியுள்ளார். பாடல்கள் தவிர 6000-க்கும் மேற்பட்ட மேடைக் கச்சேரிகளில் 35-ஆண்டுகளுக்கும் மேலாக பாடியுள்ளார்.

நேற்றோடு அவரது குரல் காற்றில் கலந்தது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது V4U மீடியா நிறுவனம் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.