Home PR News Celebrities நடிகர் துவாரகிஷ் மறைவுக்கு இரங்கல் பதிவிட்டார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!

நடிகர் துவாரகிஷ் மறைவுக்கு இரங்கல் பதிவிட்டார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!

நடிகர் மற்றும் இயக்குனர் திரு.துவாரகிஷ் அவர்களின் மறைவுக்கு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்கள் இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல கன்னட நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான துவாரகிஷ் தனது 81-வது வயதில் மறைந்தார். கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது திரைப்பயணத்தை துவங்கியவர். கன்னடத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார்.அப்படியே திரைப்பட இயக்கம் மற்றும் தயாரிப்பு பணிகளையும் மேற்கொள்ள ஆரம்பித்தார்.’சூப்பர் ஸ்டார்’ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி நடித்த ‘நான் அடிமை இல்லை’ திரைப்படத்தை இயக்கி, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் வெளியான ‘ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

சுமார் 48-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார்.வயது முதிர்ச்சியின் காரணமாக வெளியில் எங்கும் செல்லாமல் இருந்த, துவாரகிஷ் அவரது இல்லத்தில் நேற்று காலை காலமானார். அவரது மறைவிற்கு கன்னடத் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

‘சூப்பர் ஸ்டார்’ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,”எனது நீண்ட கால அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது.காமெடி நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய துவாரகிஷ்,பெரிய தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் தன்னை உயர்த்திக் கொண்டார். அவருடன் பழகிய காலங்கள் என் நினைவுக்கு வந்து போகின்றன. அவரது குடும்பத்தாருக்கு, எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்”, என பதிவிட்டுள்ளார்.

நமது V4U மீடியா நிறுவனமும்,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது.