தமிழ் சினிமாவின் இன்றைய கலை உலக மார்க்கண்டேயன் என்று சொல்லும் அளவிற்கு என்றும் இளமையாக காட்சியளிக்கிறார் நடிகர் ரஹ்மான். சினிமாவில் இவர் அடி எடுத்து வைத்து 40 வருடங்களை தொட்டு விட்டார். தற்போதும் பல படங்களில் கதையின் நாயகனாக மற்றும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
இன்னும் சில தினங்களில் ஹிந்தியில் இவர் முதன்முதலாக நடித்துள்ள கண்பத் என்கிற படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் அமிதாப்பச்சனின் மகனாக அவர் நடித்துள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது திரையுலக பயணம் குறித்தும் அதில் நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார் நடிகர் ரஹ்மான்.
இது பற்றி அவர் கூறும் போது ஆரம்ப காலத்தில் நான் நடித்த சில படங்களில் ஆடிய நடனத்தை பார்த்துவிட்டு என்னை மிகப்பெரிய டான்சர் என நினைத்து விட்டார்கள். ஆனால் நான் டான்சர் இல்லை. அப்படி நினைத்து ஒரு படத்தில் எனக்கு டான்ஸ் மாஸ்டர் கதாபாத்திரம் கொடுத்து விட்டார்கள். நானும் வழக்கம்போல டிஸ்கோ டான்ஸ் ஆடுவது தானே என நினைத்துக் கொண்டு படப்பிடிப்புக்கு சென்ற பிறகுதான் தெரிந்தது, அங்கே பரதநாட்டியம் கற்றுக் கொள்ளும் மாணவிகளுக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் குருவாக நடிக்கப் போகிறேன் என்று. நடனம் என்பதே பெரிதாக தெரியாதபோது அதிலும் பரதநாட்டியம் சொல்லித் தரும் குரு என்றால் எப்படி சமாளிப்பது ? அதுமட்டுமல்ல அந்த காட்சியில் என் மாணவிகளாக நடிப்பவர்கள் எல்லோருமே கலாச்சேத்ராவில் நடனம் பயின்ற மாணவிகள் என சொன்னார்கள்.
பிறகு என்னுடைய நடன இயக்குநரிடம் விஷயத்தை விளக்கி மறுநாளில் இருந்து நான் மாணவிகளுக்கு என்ன விதமாக நடன அசைவுகள் கற்றுத் தரப்போகிறேன் என்பதை மட்டும் முதல் நாள் இரவு நான்கு மணி வரை ரிகர்சல் செய்துவிட்டு மறுநாள் படப்பிடிப்பில் நடித்து சமாளித்தேன். இதேபோல பல நாட்கள் சமாளித்து அந்த படத்தை முடித்தேன்” என்று நடனத்தில் தான் சமாளித்த அனுபவங்களை நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார் ரஹ்மான்.