இறுகப்பற்று படத்திற்கு கிடைத்த வெற்றியால் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கொடுத்த நம்பிக்கை
சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சின்ன பட்ஜெட் படங்கள் தயாரிப்பது குறித்து எஸ் ஆர் பிரபு நம்பிக்கை தரும் விதமாக பேசினார்
அவர் பேசும்போது இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு ஒரு சின்ன தயக்கம் இருந்தது. வழக்கமாக பெரிய படங்களை எடுக்கும்போது ஓடுமா ஓடாதா என யோசிக்காமல் படத்தை எடுப்போம். ஆனால் யாராவது சின்ன படம் எடுக்கிறேன் என என்னிடம் சொன்னால் நல்ல படமாக எடுங்கள் என்று சொல்வேன். அப்போது என் மீது பலரும் கோபப்படுவார்கள்.
ஆனால் கொரோனா தாக்கத்திற்கு பிறகு நிலைமை எல்லாமே மாறியது. சின்ன பட்ஜெட்டில் அதுவும் நான்கு கோடிக்குள் படம் எடுத்தால் மக்கள் ஆதரவு கிடைக்குமா என சந்தேகம் ஏற்பட்டது. காரணம் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து சிறிய படங்களை பார்ப்பது குறைந்துவிட்டது. த்ரில்லர் படம் என்றால் கூட இளைஞர்கள் படம் பார்க்க வருவார்கள். அவர்கள் மூலமாக படம் பற்றி வெளியே பரவிவிடும்.
ஆனால் குடும்ப படத்திற்கு அப்படி வருவார்களா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் நல்ல கதை என்றால் தைரியமாக சின்ன பட்ஜெட் படங்களை எடுக்கலாம் என்கிற நம்பிக்கையை இறுகப்பற்று படத்திற்கு கிடைத்த வெற்றி மூலம் மக்கள் கொடுத்து இருக்கிறார்கள்.. அதற்காகத்தான் இந்த நன்றி தெரிவிக்கும் சந்திப்பு” என்றார்.