திரையுலகில் ஒரு இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ஜி.வி பிரகாஷின் பயணம் மிக சீராக சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் மிகப்பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதே சமயம் இன்னொரு பக்கம் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது நடிப்பில் வெளியான அடியே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது கிங்ஸ்டன் என்கிற படத்தில் நடிக்கிறார் ஜி.வி பிரகாஷ். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ்இப்படத்தை இயக்குகிறார்.


இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப்படமாக உருவாகும் இப்படத்தின் தொடக்கவிழாவில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் கலந்துகொண்டு, ‘கிங்ஸ்டன்’ படத்தை கிளாப் அடித்து, அதன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார்.


கதாநாயகியாக திவ்யபாரதி, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், மலையாள நடிகர் ஷாபுமோன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷே இசையமைக்கிறார்.
படத்தின் வசனங்களை திவிக் எழுத, படத்தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்கிறார். கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கையாள, அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்கிறார். கடல் பின்னணியில் திகில் சாகச படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்
தயாரிப்பாளராக அறிமுகமாவது குறித்து ஜீ.வி.பிரகாஷ் பேசுகையில், “தயாரிப்பாளராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதற்கான சரியான கதை அமைய வேண்டும். “கிங்ஸ்டன்” கதையைக் கேட்டவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் என்ற நம்பிக்கை கிடைத்தது, உடனடியாக தயாரிக்க முடிவு செய்து, பணிகளைத் தொடங்கிவிட்டேன்” என்கிறார்