தனுஷ் நடிப்பில் இந்த வருடம் வாத்தி என்கிற ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்ததாக மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படம் தான் கேப்டன் மில்லர். ராக்கி, சாணிக்காயிதம் உள்ளிட்ட வித்தியாசமான படைப்புகளை கொடுத்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
கன்னட திரை உலகின் முன்னணி நடிகரும் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவருமான நடிகர் சிவராஜ் குமார் இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க முக்கிய வேடத்தில் சந்திப் கிஷன் நடித்துள்ளார்.
இந்த படம் வெள்ளையர்கள் நம்மை ஆட்சி செய்த காலகட்டத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் படத்தை கர்நாடகாவில் கன்னடத்திலும் தமிழிலும் வெளியிடும் உரிமையை கர்நாடகாவில் உள்ள பிரபலமான கே ஆர் ஜி ஸ்டூடியோ நிறுவனம் கைப்பற்றி உள்ளது.