தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோக்களில் குறிப்பிடத்தக்கவராக பயணித்து வருபவர் நடிகர் விஷால். அந்த வகையில் சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யாவும் நடித்திருந்தார்.
இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தொடர்ந்து வசூலை குவித்து வந்த இந்த படம் தற்போது 100 கோடி வசூலித்து 100 கோடி வசூல் கிளப்பில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
விஷால் நடிப்பில் வெளியான படங்களில் முதன்முறையாக இப்படி நூறு கோடி வசூலித்த படம் மார்க் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் உருவாகும்போதே இந்த படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார் விஷால்.
கடந்த சில வருடங்களாகவே விஷால் நடித்திருந்த படங்கள் எதுவும் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்காத நிலையில் இந்த மார்க் ஆண்டனி திரைப்படம் அதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து விஷாலுக்கு மிகப்பெரிய பரிசை தந்து இருக்கிறது.