மினி ஸ்டுடியோ சார்பில் வினோத் குமார் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியானது. விஷால் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தை ஆதித் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.. எஸ்.ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரித்து வர்மா, அபிநயா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
டைம் ட்ராவலை மையப்படுத்தி உருவான இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று உலகெங்கிலும் இப்போதுவரை 100 கோடி வசூலித்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களுடன் வெற்றிச் சந்திப்பை மார்க் ஆண்டனி குழுவினர் நடத்தினார்கள்.
இந்த நிகழ்வில் படத்தின் வெற்றி குறித்து தங்களது உணர்வுகளை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.
நாயகன் விஷால் பேசும்போது, “எனது நண்பர், கல்லூரி தோழர் விஜய் ஆண்டனியின் மகள் இப்படி திடீரென காலமானது மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. என் வாழ்நாள் முழுவதும் விஜய் ஆண்டனிக்கு பக்கபலமாக இருப்பேன்” என்று கூறினார்..