மிகக்குறுகிய காலகட்டத்தில் அதுவும் மிகவும் இளம் வயதில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மட்டுமல்ல, இப்பொழுது பாலிவுட்டே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய கமர்சியல் இயக்குனராகவும் மாறி இருக்கிறார் இயக்குனர் அட்லீ. ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ஆர்யாவை வைத்து முதல் படமாக ராஜா ராணியை இயக்கினாலும் அடுத்தடுத்து தனது மூன்று படங்களையும் விஜய்யை வைத்து இயக்கும் அளவிற்கு கமர்சியல் இயக்குனராக மாறி வெற்றி படங்களாக கொடுத்தார்.

இந்த வெற்றிகளால் தான் இவருக்கு பாலிவுட் ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தையும் வெற்றிப்படமாக்கி ஷாருக்கானுக்கு பரிசாக அளித்து விட்டார். இப்போது வரை 800 கோடியை தாண்டி விட்ட அந்த படம் விரைவில் ஆயிரம் கோடி என்கிற மிகப்பெரிய வசூல் இலக்கை தொட இருக்கிறது.

இந்த நிலையில் அட்லீ அடுத்ததாக யாருடைய படத்தை இயக்கப் போகிறார் என்கிற பேச்சு ஓடிக்கொண்டே இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் அட்லீயின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் விஜய், ஷாருக்கான் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது இருவருமே அட்லீயிடம் நாங்கள் இரண்டு பேரும் இணைந்து நடிக்கும் விதமாக கதையை தயார் பண்ணுங்கள், நிச்சயமாக நடிக்கிறோம் என்று கூறியுள்ளார்கள். தன்னுடைய பிறந்த நாளன்றைக்கு தன்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக அப்படி கூறுகிறார்கள் என நினைத்துள்ளார் அட்லீ.
ஆனால் மறுநாளும் போன் செய்து இதே விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளார் விஜய். ஷாருக்கானும் தன் பங்கிற்கு ஜவான் வெற்றியை தொடர்ந்து இப்படி விஜய்யுடன் இணைந்து நடிக்கும் கதை இருந்தால் உடனே தயார் செய்யுங்கள் என்று கூறி விட்டாராம்.

இந்த தகவலை தற்போது உற்சாகமாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார் அட்லீ. ஒருவேளை இவரது அடுத்த படம் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.