தமிழில் பிரசன்னா, சினேகா இணைந்து நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு என்கிற படத்தை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். அந்த படத்தில் நடித்த சமயத்தில் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து பிரசன்னா சினேகா இருவரும் திருமணம் செய்து கொண்ட பெருமையும் அந்த படத்திற்கும் இந்த இயக்குனருக்கும் உண்டு. அதைத்தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லாலை வைத்து பெருச்சாழி, தமிழில் அர்ஜுனை வைத்து நிபுணன் ஆகிய படங்களை இயக்கினார் அருண் வைத்தியநாதன்,

அதனை தொடர்ந்து தற்போது குழந்தைகளை மையப்படுத்தி சாட் பூட் த்ரீ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் குழந்தைகளை மையப்படுத்தியது என்பதுடன் விலங்குகளின் நலனை பேணிக்காக வேண்டும் என்கிற அக்கறையையும் பறைசாற்றும் விதமாக உருவாகியுள்ளது. இதனால் விலங்குகள் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள மேனகா காந்தி எம்பிக்கு இந்தப் படம் திரையிட்டு காட்டப்பட்டது.

படத்தைப் பார்த்துவிட்டு இயக்குனரையும் படக்குழுவினரையும் மனதார பாராட்டிய மேனகா எம்பி இதுபற்றி கூறும்போது, “குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் என அனைவரும் கட்டாயப் பார்க்க வேண்டிய படம் என இதை பரிந்துரைக்கிறேன். இந்த திரைப்படம் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டால் எல்லைகளைக் கடந்து அனைத்து மொழி மக்களும் இந்த படத்தை கண்டு களிக்கலாம்.

திரையரங்குகளுக்கு பிறகு ஓடிடி தளத்தில் வெளிவரும் சமயம் இந்த திரைப்படம் இன்னும் பெரும்பான்மையான மக்களை சென்றடையும் என உறுதியாக நம்புகிறேன். விலங்குகள் நலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்ற செய்தியுடன் இந்த படம் உருவாகி இருப்பதால் குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் இந்தப் படம் ஒரு கட்டாய தேர்வாக அமையும்” என்று கூறியுள்ளார்.