இங்க அடிச்சா அங்க வலிக்கும் என்கிற வசனத்திற்கு ஏற்றார்போல தற்போது தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை திடீரென அறிவிப்பது, சில சமயம் ரிலீஸ் தேதி நெருங்கும் நேரத்தில் திடீரென வேறு தேதிக்கு மாற்றி வைப்பதன் மூலம் மீடியம் மற்றும் சிறிய பட்ஜெட் படங்களை தங்களை அறியாமலேயே பொம்மலாட்டம் ஆட வைக்கின்றன. அதற்கு லேட்டஸ்ட் உதாரணம் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ரத்தம் படம் தான்.

தமிழ் படம் இரண்டு பாகங்களை இயக்கிய சி.எஸ் அமுதன் இயக்கத்தில் ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள ரத்தம், வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த சந்திரமுகி 2 திரைப்படம் இன்னும் சில பணிகள் நிறைவு பெறாத காரணத்தினால் திடீரென தங்களது ரிலீஸ் தேதியை செப்டம்பர் 28க்கு மாற்றி மறு தேதியை அறிவித்தனர்.

இதனால் செப்டம்பர் 28ல் வெளியாக இருந்த ரத்தம் உள்ளிட்ட சில படங்களுக்கு சிக்கல் எழுந்தது. அந்த சமயத்தில் சந்திரமுகி 2 வெளியாகும்போது ரசிகர்களின் மொத்த கவனமும் அந்த படத்தின் மீது தான் இருக்கும் என்பதால் தங்கள் படத்திற்கு எதிர்பார்த்த அளவு திரையரங்குகள் கிடைக்காது, தங்களது படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து வேறு வழியின்றி தற்போது செப்டம்பர் 6ஆம் தேதி ரத்தம் படத்தின் ரிலீஸ் செய்தியை மாற்றி அறிவித்துள்ளனர்.