கடந்த 15 வருடங்களாக நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சூரியை தான் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக மாற்றியவர் இயக்குனர் வெற்றி மாறன். அப்படி அவர் நடித்த அந்த முதல் படத்திலேயே ஒரு கதையின் நாயகனாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவிட்டார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ளது. விரைவில் இந்த வருடத்திற்குள்ளேயே இந்த இரண்டாம் பாகமும் வெளியாகும் என தெரிகிறது.

இது தவிர இன்னும் ஒரு சில படங்களில் கதாநாயகனாக சூரி நடித்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறலுடன் கூட்டணி சேர்கிறார் சூரி. ஆனால் இந்த முறை அவரது டைரக்ஷனில் அல்ல.. அவர் எழுதும் கதையில். எதிர்நீச்சல் பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் தான் கதையின் நாயகனாக நடிக்கிறார் சூரி.

இந்த படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த படத்தில் மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் சமுத்திரக்கனி மொட்ட ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.