குரங்கு பொம்மை என்கிற படத்தை இயக்கியதன் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியவர் நித்திலன் குமாரசாமி. இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து மகாராஜா என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு பிரபல கன்னட இசையமைப்பாளர் காந்தாரா புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இந்த பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஜய்சேதுபதி, “என்னை திட்டியும் வாழ்த்தியும் இந்த உயரத்திற்கு கொண்டு வந்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொறுமையும் அனுபவமும் ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். அத்தகைய அற்புதமான அனுபவத்தை கொடுத்த என் இயக்குநர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி!
இந்த படம் உங்களுக்கு பிடித்தது போல வந்திருக்கிறது. ஐம்பதாவது படம் என்பது நிச்சயம் என் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல். அது ஞானத்தையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது. என் சினிமா வாழ்க்கையின் மிக முக்கிய புள்ளியை அருள் தாஸ் அண்ணன் வைத்துள்ளார். அவரைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மீண்டும் வந்துள்ளது. நட்டி சாரை பார்க்கும் பொழுது ரஜினி சாரின் அதே வேகம் ஈர்ப்பு அவரிடம் இருந்தது.
பிலோமின், தினேஷ், அபிராமி, மம்தா என அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர். நிதிலன் தயாரிப்பாளர்களின் பணத்தை எடுத்து தருவேன் என்று சொன்னது திமிர் கிடையாது, அவர் படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை. அந்த அளவுக்கு சிறப்பாக படம் வந்திருக்கிறது.
பாய்ஸ் மணிகண்டன் அவரின் சமீபத்திய பேட்டி ஒன்று பார்த்தேன். மாடர்ன் சாமியார் போல அவ்வளவு நம்பிக்கையாக பேசியிருந்தார். அவர் இன்னும் நிறைய உயரம் அடைய வேண்டும்.
அனுராக் சாரின் தயாரிப்பில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது. ஆனால் இந்த படத்திற்காக அவர் செய்த வேலை மிக பெரியது. நானும் அவரும் இணைந்து இன்னும் நிறைய படங்கள் பணிபுரிய வேண்டும் என விருப்பம்” என்றார்.