இன்னும் பல கிராமங்களில் ஒடுக்கப்பட்ட மக்களில் பலர் தாங்கள் காலம் காலமாக செய்து வந்த வேலையையே தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக செய்ய நிர்பந்திக்கப்படுவதும் அதை மீறி வெளியேறி புது வாழ்க்கை அமைக்க நினைப்பவர்களுக்கு ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் எந்த விதமாக எல்லாம் இடைஞ்சல் கொடுக்கிறார்கள் என்பதையும் பொட்டில் அடித்தார்போல சொல்லி இருக்கும் படம் தான் தமிழ் குடிமகன்.
கிராமத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்பவரின் மகன் சேரன். தந்தையைப் போலவே அந்த சடங்குகளை செய்து வந்தாலும் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்து வாழ்க்கையில் முன்னேறி செல்ல வேண்டும் என்கிற குறிக்கோளுடன் வேலைக்கு படித்து வருகிறார். அவருடைய தங்கையும் மருத்துவராகும் முயற்சியில் தீவிரமாக படித்து வருகிறார்.
ஆனால் சேரன் இப்படி தங்களது குலத்தொழிலை விட்டு வெளியேறி செல்வது பிடிக்காத அந்த ஊரின் பெரிய மனிதர்களான லால், அருள்தாஸ் உள்ளிட்டோர் இதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். இதனால் எதிர்பாராத சில அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.
ஒரு கட்டத்தில் ஊரில் இறுதி சடங்கு செய்ய சேரன் வந்துதான் ஆகவேண்டும் என நிர்பந்தம் கொடுக்கப்படுகிறது. இதைத் தாண்டி சேரன் என்ன முடிவு எடுத்தார், அதன் பிறகு என்ன நடந்தது என்பது மீதிக்கதை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அழகான கிராமத்து கதையில் கதையின் நாயகனாக சேரனை பார்க்க முடிவதே ஒரு ஆறுதலான விஷயம். பாரதி கண்ணம்மா படத்தின் இரண்டாம் பாகமோ என்று சொல்ல வைக்கும் வகையில் கொடுக்கப்பட்ட மக்களின் வலியையும் அவர்கள் முன்னேற முடியாமல் தடைக்கற்கள் போடப்படும் வேதனையையும் அழகாக தனது கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் சேரன்.
அவரது மனைவியாக ஸ்ரீ பிரியங்கா, தங்கையாக தீப்சிகா இருவருமே தங்களது கதாபாத்திரத்தின் பொறுப்புணர்ந்து நடித்துள்ளார்கள். அதே சமயம் இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக லால் மற்றும் அருள்தாஸ் ஆகியோரின் வில்லத்தனமான கதாபாத்திரங்கள் படம் முழுவதும் ரசிகர்களிடம் ஆதிக்கம் செய்கின்றன. சேரனுக்கு ஆதரவாக குருள் கொடுக்கும் வேல ராமமூர்த்தி மற்றும் காவல்துறை அதிகாரியாக சுரேஷ் காமாட்சி இருவரும் மனதில் நிற்கிறார்கள்.
இந்த படத்தின் மூலம், தான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக கூறியுள்ளார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன். படம் வெளியான பிறகு சில சர்ச்சைகள் அங்கே இங்கே இதுகுறித்து எழுந்தாலும் பாதிக்கப்பட்டவனின் வழி தான் இங்கே பெரிதாக பேசப்படும் என்பதால் அதுவே இந்த தமிழ்க்குடிமகன் படத்திற்கு கிடைத்த வெற்றி தான் என்று சொல்ல வேண்டும்.