HomeReviewநூடுல்ஸ் ; விமர்சனம் 

நூடுல்ஸ் ; விமர்சனம் 

ஒரே இடத்தில் அதுவும் ஒரே வீட்டிற்குள்  போரடிக்காமல் படம் எடுக்க முடியுமா ?  முடியும் என நூடுல்ஸ் படம் மூலமாக சாதித்துக் காட்டியிருக்கிறார் அருவி படம் மூலம் பிரபலமான நடிகரும் இந்த படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளவருமான அருவி மதன்.

ஹரிஷ் உத்தமன் தனது காதலி ஷீலா ராஜ்குமாரை அவரது பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு சென்னையில் பத்து வருடங்களாக அழகாக குடித்தனம் நடத்தி வருகிறார். அதன் அடையாளமாக ஒரு அழகிய மகளும்  இவர்களுக்கு இருக்கிறார்.  இந்த நிலையில் ஒருநாள் இரவு  தங்களது பக்கத்து குடித்தனக்காரர்களுடன் மொட்டை மாடியில் அமர்ந்து உணவு அருந்தியபடி பாட்டுப்பாடி  கலகலப்பாக  விளையாடுகிறார்கள் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர்.

ஆனால் இவர்களது சத்தம் இடைஞ்சலாக இருப்பதாக போலீசுக்கு தகவல் செல்ல அதை விசாரிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி அருவி மதன்.  இதில் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட ஹரிஷ் உத்தமன் மீது கோபத்துடன் செல்கிறார் அருவி மதன். அன்றைய இரவே அவரது நண்பன் மூலமாக ஷீலா ராஜ்குமாரின் பெற்றோர் மறுநாள் காலையில் தங்கள் வீட்டிற்கு வர இருக்கிறார்கள் என்றும் ஊரிலிருந்து கிளம்பி விட்டார்கள் என்றும் தகவல் வருகிறது.

மனைவிக்கு தெரியாமல் காலையில் அவர்களை வரவேற்று உபசரிக்க தேவையான ஏற்பாடுகளை செய்கிறார் ஹரிஷ் உத்தமன். இதற்கிடையே அதே இரவில் பக்கத்து வீட்டு வயதான தம்பதிகளுடன் தகராறு செய்யும் ஒரு ஆட்டோக்காரரை சமாதானப்படுத்தும்போது அதில் ஏற்படும் தள்ளுமுள்ளுவில்  ஆட்டோக்காரர் ஹரீஷ் மீது போலீசில் புகார் அளிக்கிறார்.

மறுநாள் காலையில் ஹரிஷ் உத்தமன் கடைக்கு சென்று விட்டு வருவதற்குள்  தனது வீட்டில் அடையாளம் தெரியாத ஒரு நபர்  விழுந்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். மகளிடமிருந்து செல்போனை பிடுங்க முயற்சித்ததால்  பைக்கில் சென்ற அவனைப் பிடித்து இழுக்கும்போது இப்படி வந்து விழுந்து இறந்து விட்டான் என ஷீலா ராஜ்குமார் சொல்ல இப்போது பதட்டம் தொற்றிக்கொள்கிறது.

இந்த நிலையில் தன் வீட்டருகில் வக்கீல் ஒருவர் இருப்பதை அறிந்து அவரை அழைத்து வந்து பிரச்சனையை போட்டு உடைக்கிறார் ஹரிஷ் உத்தமன்.  இதை  வேறு விதமாக அணுகலாம் என முயற்சிக்கும் போது காலை 7 மணிக்கே  வீட்டுக் கதவை தட்டி  ஆட்டோகாரர் புகாரின் பேரில் ஹரிஷ் உத்தமனை  விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்து நிற்கிறார் அருவி மதன்.

வீட்டிற்குள்ளே பிணம், விரைவில் வர இருக்கும் மாமனார், மாமியார்,  விசாரணைக்கு அழைத்துச் செல்ல  வந்திருக்கும் போலீசார்  என  எல்லாமாக ஒன்று சேர்ந்து ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார் ஆகியோரை பொட்டிப் பாம்பாக அடங்கச் செய்கிறது இந்த பிரச்சனையிலிருந்து இவர்களால் மீள முடிந்ததா ? அருவி மதன் தனது அதிகார தோரணையை காட்டினாரா ?  ஒரு தவறும் செய்யாத தம்பதிக்கு நியாயம் கிடைத்ததா என்பது மீதிக்கதை.

இதுநாள் வரை டெரரான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஹரிஷ் உத்தமன் முதன்முறையாக அதேபோன்ற ஒரு போலீசாரிடம் கெஞ்சும் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது உண்மையிலேயே வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. அதே சமயம் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் 100% பொருந்தி உள்ளார் என்பது தான் இங்கே குறிப்பிட்ட வேண்டிய அம்சம்.  தன் வீட்டில் அப்படி ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்பு போலீசாரிடம் கெத்தாக பேசிவிட்டு தற்போது தன் பக்கம் தவறு இருப்பதால் தப்பைக்கூட சுட்டிக் காட்ட முடியாமல் தவிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் ஹரிஷ் உத்தமன்.

நாயகி ஷீலா ராஜகுமாரும் அப்பாவியாக, தன்னை அறியாமலேயே ஒரு செய்த தவறுக்காக நடுங்குவதும் அவர் மட்டும் பதறாமல் நம்மையும் சேர்த்து பதட்டத்திற்கு ஆளாக்குகிறார். ஒரு போலீசாரிடம் தேவையில்லாமல்  பிரச்சனை வளர்த்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பதை அருவி மதன் அவ்வளவு எதார்த்தமாக வெளிக்காட்டி உள்ளார்.

வக்கீலாக நடித்துள்ள கணேஷின் நடிப்பு சபாஷ் பெறுவதுடன் பல இடங்களில் கைதட்டலையும் அள்ளுகிறது. குறிப்பாக ஹரிஷ் உத்தமன்,  ஷீலா ராஜ்குமார் தம்பதியை காப்பாற்ற அவர் தன்னாலான முயற்சியை எடுப்பது  அவர் மீதான மரியாதையை கூட்டுகிறது.

நடிப்பில் மட்டுமல்லாமல் முதல் படத்திலேயே டைரக்சனிலும் அசத்தியுள்ளார் அருவி மதன். சோசியல் மீடியாவை யார் சரியாக கையாள்கிறார்களோ அவர்கள் தான் ராஜா  என்பதை  கிளைமாக்ஸ் உணர்த்துகிறது.

வாய்ப்பு கிடைத்தால் எல்லாருமே தாராளமாக தியேட்டருக்கு போய் பார்க்க வேண்டிய படம் தான் இந்த நூடுல்ஸ்

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments