தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி கடந்த சில வருடங்களாக குணச்சித்திர நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மாரிமுத்து. இன்று காலை தான் நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
57 வயதான மாரிமுத்துவின் இந்த திடீர் அகால மரணம் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது வருத்தத்தையும் இரங்கலையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்களின் அஞ்சலிக்காக இவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு பகுதியில் இருக்கும் பசுமலை என்கிற அவரது சொந்த கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு நாளை அங்கே நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இயக்குனர்கள் வசந்த், சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்து கண்ணும் கண்ணும் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், அதை தொடர்ந்து விமல் நடித்த புலிவால் என்கிற படத்தையும் இயக்கினார்,
சிறிய இடைவெளிக்கு பிறகு குணச்சித்திர நடிகராக மாறிய அவர் கொம்பன், கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் ஒரு நடிகராக இடம் பிடித்தார்,
கடந்த சில மாதங்களாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் இவர் நடித்து வரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது,
தற்போது தான் தனது இரண்டாவது இன்னிங்ஸில் மிகப்பெரிய உயரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த மாரிமுத்து இப்படி அகால மரணம் அடைந்தது அனைவரிடமும் மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தி உள்ளது.