மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. விஷால் கதாநாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்து வர்மா மற்றும் சுனில், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
செப்-15ல் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் புரமோஷன் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பதிரிகையாளகளிடம் விஷால், எஸ்.ஜே சூர்யா மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மூவரும் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் விஷால் பேசும்போது, “விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக செப்-15ல் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியில் செப்டம்பர் 22லும் இந்த படம் வெளியாக இருக்கிறது.
ஆதிக்கின் நிஜமான சினிமா பயணம் வரும் செப்டம்பர் 15ல் இருந்து தான் துவங்கப் போகிறது. இதற்கு முன் அவர் பண்ணியது எல்லாம் சினிமாவில் நிலைத்து நிற்க நடத்திய போராட்டம் மட்டுமே. அனேகமாக ஆதிக்கிற்கு இந்த வருடம் எப்படியும் திருமணம் முடிந்து விடும் என நினைக்கிறேன்.
படத்தின் ரிலீஸ் தேதியை ஒன்றரை மாதத்திற்கு முன்பே தீர்மானித்து விட்டோம். விளையாட்டு போட்டி என்று இருந்தால் நிறைய வீரர்கள் இருந்தால் தான் சுவாரசியம். களத்தில் எந்த படம் இறங்கினாலும் போட்டியை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். ஹிந்தியில் மட்டும் ஜவான் படம் ரிலீஸ் என்பதால் ஒரு வாரம் தள்ளி செப்டம்பர் 22-ல் ரிலீஸ் செய்கிறோம்” என்றார்.