சமீப காலமாகவே எஸ்.ஜே சூர்யா நடிக்கும் படங்களுக்கு என ஒரு தனி வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. குறிப்பாக மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அவரது படங்கள் வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. படத்தில் ஹீரோவையும் தாண்டி அவர் ஏதாவது ஒரு புது விஷயம் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவரும் தொடர்ந்து அதை ஏமாற்றாமல் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தற்போது விஷாலுடன் இணைந்து மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அப்படி ஒரு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் எஸ்.ஜே சூர்யா பேசும்போது, “பேச்சுலர்களாக சேர்ந்து ஒரு பேமிலி படத்தை எடுத்துள்ளோம். கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கும்போது நாங்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம். எங்களை நோக்கி வேகமாக வந்த லாரி டிரைவர் பிரேக் பிடிக்க தவறிவிட்டார். அதை நான் கவனித்து விட்டேன். விஷால் அதை கவனிக்கவில்லை. ஆனால் படக்குழுவினர் இதைக்கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டதால் பயந்துபோன டிரைவர் பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்து இயக்குநர் அமர்ந்திருந்த பக்கம் வண்டியை திருப்பி விட்டார். நல்லவேளையாக அனைவரும் வேறு பக்கம் குதித்து தப்பித்தனர். எல்லோருமே நடிக்க ஆசைப்பட்டு ஓடிவந்து கொண்டு இருக்கிறோம்.. ஆனால் விஷாலோ நடிப்பை விட்டு டைரக்ஷன் பக்கம் போக ஆசைப்படுகிறார்” என்றார்.