தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக பிசியாக நடித்து வருபவர் யோகி பாபு. இன்றைய தேதியில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் நடிக்கிறார். அதற்கு சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ஒரு உதாரணம்.
அதேபோல உணர்வுபூர்வமான படங்களை எடுக்கும் தங்கர்பச்சான் போன்றவர்களின் படங்களிலும் அவர் நடிக்க தயங்குவதில்லை. அப்படி அவர் நடித்துள்ள கருமேகங்கள் கலைகின்றன திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் வாய்ப்பு கிடைக்கும்போது நல்ல கதை அமையும் போது சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் நடித்துள்ள லக்கி மேன் திரைப்படமும் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பாலாஜி வேணுகோபால் என்பவர் இயக்கியுள்ளார். விரைவில் படம் வெளியாக உள்ளதை தொடர்ந்து இந்த படத்தின் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் லக்கி மேன் படக்குழுவினர்.

இந்த நிகழ்வில் யோகிபாபு பேசும்போது, “நான் சரியான நேரத்துக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வதில்லை என்பது போன்று அவ்வப்போது சிலர் என் மீதும் குற்றம் சாட்டுகிறார்கள். நான் எல்லோருக்கும் சரியான தேதிகளை கொடுத்து நடித்து வருகிறேன். பலர் தங்களது பொருளாதார பிரச்சினையால் குறித்து நேரத்தில் படங்களை எடுக்க முடியாமல் போகிறது. அதனால் மீண்டும் அவர்கள் அழைக்கும் போது வேறு படங்களில் நான் இருப்பதால் என்னால் உடனடியாக அவர்களுக்கு தேதி ஒதுக்க முடிவதில்லை.

அது மட்டுமல்ல சில நாட்கள் மட்டும் கால் சீட்டு வாங்கி என்னை வைத்து படபிடிப்பு நடத்திவிட்டு படத்தின் ஹீரோவே நான் தான் என்பது போல பிரமோஷன் செய்கிறார்கள். இது ரசிகர்களை ஏமாற்றுவது போல இருக்கிறது. ஒரு படத்தில் கவுண்டமணியை ஒருவர் வருங்கால சி எம் என்று சொல்லிவிடுவார். அதன் பிறகு அவர் எல்லோரிடமும் ஐயா நான் அப்படி சொல்லவில்லை என்று புலம்புவார். பார்க்கவே காமெடியாக இருக்கும். அப்படித்தான் இப்போது என்னுடைய நிலையும் இருக்கிறது.

அதேபோல நான் என்னிடம் வரும் இயக்குனர்களிடம் கதை கேட்டு ஒப்புக்கொள்வதில்லை முதலில் அவர்களின் கஷ்டங்களைத்தான் கேட்டு படங்களை ஒப்புக்கொள்கிறேன். இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி வேணுகோபால் அப்படி ஒரு கஷ்டமான சூழ்நிலையில் தான் என்னை சந்தித்தார்” என்று கூறினார்