இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறி சமீபத்தில் இயக்குனராகவும் மாறிய விஜய் ஆண்டனி நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே அவரது நடிப்பில் தமிழரசன், பிச்சைக்காரன் 2 மற்றும் கொலை ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகின.
இதில் பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனியே இயக்கியிருந்தார். இந்த படம் ஓரளவுக்கு வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக வினாயகன் வைத்தியநாதன் என்பவர் இயக்கத்தில் உருவாகும் ரோமியோ படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. மிருணாளினி ரவி கதாநாயகியாக நடிக்கிறார்

விஜய் ஆண்டனியின் இதற்கு முந்தைய படங்கள் அனைத்துமே ஆக்சன் மற்றும் சீரியஸ் வரிசையிலேயே இருந்து வந்தது. குறிப்பாக காதல் காட்சிகளுக்கு அவர் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் ஒரு ரொமாண்டிக் படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பது ஆச்சரியமான விஷயம் தான்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கிய இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது