வல்லரசு நாடுகளில் ஒன்றாக மிக வேகமாக வளர்ந்து வரும் நம் இந்திய நாடு பல விண்வெளி சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறது. அந்த வகையில் வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக இந்தியாவின் சந்திராயன் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்துள்ளது.
இதை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். நிலவில் கால் பதித்த நான்காவது நாடு என்கிற பெருமையையும் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்கிற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.
இந்த சாதனை குறித்து நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் வெளிப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், “வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா இந்த மாபெரும் சாதனையால் உலகையே பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. முதன்முறையாக நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திராயனை தரை இறக்கியதன் மூலம் நமது தேசம் அதன் பெருமையை அடையாளப்படுத்துகிறது. இஸ்ரோவுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.. நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்” என பதிவிட்டுள்ளார்.