சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் ஜெயிலர் திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார்.
கொரோனா தாக்கம் மற்றும் உடல்நிலை காரணமாக நான்கு வருடங்களாக இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கிட்டத்தட்ட 12 நாட்கள் சுற்றுப்பயணம் குறித்து சென்னை திரும்பியுள்ளார்.
இந்த சுற்று பயணத்தின் போது பல கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தவர், பல துறவிகளையும் குருமார்களையும் தரிசித்தார். அது மட்டுமல்ல சில அரசியல் தலைவர்களையும் சந்தித்தார். அப்படி உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத்தை சந்திக்க சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்போது அவரை யோகி ஆத்யநாத் வரவேற்றபோது அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் சூப்பர் ஸ்டார்.
ஆனால் அப்படி அவர் தன்னை விட வயது குறைந்த, அதுவும் அரசியல்வாதி ஒருவர் காலில் விழுந்து ஆசி வாங்குவதா என இங்கே தமிழகத்தில் சோசியல் மீடியாவில் ஒரு பரபரப்பான சர்ச்சை கிளம்பியது. சில அவர் செய்தது தவறு இல்லை என்றும் இன்னும் சிலர் அவர் அப்படி செய்திருக்கக் கூடாது என்றும் இரு தரப்பாக கருத்து மோதல்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் விமான நிலையத்தில் அது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த சூப்பர்ஸ்டார் ரஜினி, “பொதுவாக யோகிகள், சாதுக்கள் ஆகியோரை பார்க்கும்போது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது என் வழக்கம். இதில் வயது வித்தியாசம் நான் பார்ப்பதில்லை” என்று விளக்கம் அளித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்