சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் பத்தாம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்ப ஆரம்பித்தது.
திரையிட்ட அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல்லாக மாறின. படம் வெளியாவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே புக்கிங் துவங்கிய நிலையில் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது. அந்த அளவிற்கு எதிர்ப்பார்ப்புடன் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதால் இன்னும் அதிகமாக தியேட்டருக்கு மக்கள் படை எடுக்க ஆரம்பித்தனர்.
தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளிலும் ஜெயிலர் படத்திற்கு என கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த படம் 400 கோடியை தாண்டி விட்டது 500 கோடியை தொடப் போகிறது, குறிப்பாக விக்ரம், பொன்னியின் செல்வன் வசூலை எல்லாம் முறியடித்து விட்டது என்பது போன்று செய்திகள் வெளியாகி வந்தன.
அதேசமயம் இது குறித்து எந்த தகவலையும் அறிவிக்காமல் மௌனம் காத்த தயாரிப்பு நிறுவனம் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் ஒரு வார மொத்த வசூல் 375.40 கோடி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை குறிப்பிட்டுள்ளதுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தி ரெக்கார்டு மேக்கர் என்றும் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வசூலை கணக்கிட்டு பார்த்தால் இன்னும் பொன்னியின் செல்வன் மற்றும் விக்ரம் படங்களின் இறுதி வசூலை நெருங்கவில்லை என்றாலும் அந்த படங்கள் இந்த ஏழு நாட்களில் வசூலித்த தொகையை எல்லாம் தாண்டி ஜெயிலர் திரைப்படம் வசூலித்துள்ளது என்பதையும் இன்னும் ஓரிரு தினங்களில் அந்த இரண்டு படங்களின் மொத்த வசூலையும் ஓவர்டேக் செய்து சென்று விடும் என்பதையும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.