90களில் தமிழ் சினிமாவின் பிரபல விநியோகஸ்தராகவும் அதை தொடர்ந்து பிரம்மாண்ட படங்களின் தயாரிப்பாளராகவும் மாறியவர் கே.டி குஞ்சுமோன். தான் தயாரித்த படங்கள் மூலம் திறமை வாய்ந்த இயக்குனர்களை வெளிச்சம் போட்டு காட்டியவர் இவர். அந்த வகையில் கடந்த 30 வருடங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘ஜென்டில்மேன்’.
தற்போது இதன் இரண்டாம் பாகமாக ஜென்டில்மேன்-2 படத்தை தயாரிக்கிறார் கே.டி.குஞ்சுமோன்.. ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.
இப்படத்தின் துவக்க விழா வரும் ஆக-19ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது திரையுலகில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு டிஜிட்டல் முறையில் அழைப்பு அனுப்பப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் எதையும் பிரமாண்டமாக செய்தே பழக்கப்ப்பட்ட மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அழைப்பிதழ் மூலமாக இந்த நிகழ்வுக்கு அனைவரையும் அழைக்கும் பணியை மீண்டும் ஆரம்பித்து இருக்கிறார்.
திரையுலகம் முழுவதும் இந்த அழைப்பிதழ் விநியோகம் தற்போது துவங்கியுள்ளது. மேலும், தனது திரையுலக பயணத்தின் வளர்ச்சியில் ஆரம்ப காலத்தில் இருந்து உறுதுணையாக நின்றவர்களில் இன்று இருப்பவர்களில் முக்கியமானவர்களான ஏவிஎம் சரவணன், எஸ்.பி.முத்துராமன், ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் வயோதிகம் காரணமாக நேரில் இந்த ஆரம்ப விழாவில் கலந்துகொள்ள இயலாத நிலையில் இருப்பதால் அவர்களை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தி ஆசி பெற்றார் கே.டி.குஞ்சுமோன்.
அதன்பிறகே இந்த ஆரம்ப விழாவை அவர் நடத்துகிறார் சினிமா என்பதே பிரமாண்டம் தான்.. ஆனால் சினிமா விழாக்களுக்கு இதுபோன்று அழைப்பிதழ் அனுப்புவது நடைமுறையில் இருந்து மறைந்தே பல வருங்களாகி விட்ட நிலையில், அந்த பிரமாண்டத்தை மீண்டும் கொண்டு வரும் விதமாக கே.டி.குஞ்சுமோன் அனுப்பி வரும் இந்த அழைப்பிதழை திரையுலகினர் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.