கோலமாவு கோகிலா மூலம் ஒரு வெற்றிகரமாக இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். ஆனால் அதற்கு சில வருடங்களுக்கு முன்பே சிம்புவை வைத்து இயக்கிய அவரது வேட்டை மன்னன் படம் பாதியிலேயே நின்று போனது. ஆனால் அதன் பிறகும் மனம் தளராமல் தனது இலக்கை நோக்கி பயணித்து முதல் படத்தை வெற்றிப்படமாக கொடுத்த நெல்சன் அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டாக்டர் படத்தையும் மிகப்பெரிய ஹிட் படமாக கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. அப்படி அவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் ஏதோ ஒரு விஷயத்தில் சறுக்கி ரசிகர்களின் வரவேற்பை பெறத் தவற தவறியது. இந்த நிலையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இந்த முறை அவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஜெயிலர் படத்தை ஒரு பக்காவான சூப்பர் ஸ்டார் படமாக கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இந்த படத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மட்டுமல்ல கேரள முதல்வர் பினராயி விஜயன் கூட தியேட்டருக்கு தனது குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
படம் பார்த்துவிட்டு நெல்சன் உள்ளிட்ட பட குழுவினரை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டி உள்ளார். இந்த பாராட்டு குறித்து நெல்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் முதல்வரின் பாராட்டுக்கள் எனக்கும் எனது படக்குழுவினருக்கும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்