பொதுவாகவே சினிமாவில் கதாநாயகர்களின் ஆயுட்காலம் தான் அதிகம். கதாநாயகிகள் 10 முதல் 20 வருடம் தாக்குப் பிடித்து நின்றாலே அது அதிசயம் தான். ஆனால் கதாநாயகியாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 45 வருடங்களாக திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்து உள்ளவர் நடிகை ராதிகா.
1978ல் கிழக்கே போகும் ரயில் படத்தில் இயக்குனர் பாரதிராஜா மூலமாக அறிமுகமானார் ராதிகா. அதைத் தொடர்ந்து கணக்கில் அடங்காத படங்களில் கதாநாயகியாக நடித்த ராதிகா தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஜோடி சேர்ந்து அதிக அளவில் நடித்த பெருமை ராதிகாவுக்கு தான் சொந்தம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் கதாநாயகி என்கிற பாதையில் இருந்து விலகி, கதையின் நாயகியாக மாறி பல வெற்றி படங்களை கொடுத்தார்.
கால ஓட்டத்தில் சினிமாவில் அம்மா, அக்கா என குணச்சித்திர கதாபாத்திரங்களையும் ஒரு கை பார்த்தார். இன்னொரு பக்கம் சின்னத்திரை தொடர்களை தயாரித்து நடித்து அதிலும் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தினார். சொல்லப்போனால் இன்று வீட்டுப் பெண்களை ஆக்கிரமித்து இருக்கும் சீரியல்களுக்கு முன்னோடியாக பாதை அமைத்துக் கொடுத்தது என்றால் அது ராதிகா தான்.
நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வெற்றிகரமான இல்லத்தரசியாகவும் வலம் வரும் ராதிகா, தனது 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை தொடர்ந்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.