ஓய்வுபெற்ற ஜெயில் அதிகாரி ரஜினிகாந்த்.. மனைவி ரம்யா கிருஷ்ணன், போலீஸ் அதிகாரியான மகன் வசந்த் ரவி, மருமகள் மிர்னா, பேரன் ரித்விக் என அழகான குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

சிலை கடத்தல் செய்து வரும் மாபியா கிங் விநாயகன் தனக்கு இடைஞ்சலாக இருக்கும் வசந்த் ரவியை தூக்குகிறார். கிட்டத்தட்ட வசந்த் ரவி இறந்து விட்டதாகவே அறிவிக்கப்பட்ட நிலையில் தானே களத்தில் இறங்கி மகனை கொன்றவர்களை தேடி பழிவாங்கும் வேலையில் இறங்குகிறார் ரஜினிகாந்த்.

விநாயகனை கொல்ல முயற்சிக்கும்போது அவரிடம் இருந்து எதிர்பாராத ஒரு அதிர்ச்சி தகவல் ரஜினிக்கு தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து ஆட்டமே தலைகீழாக மாறி, விநாயகன் சொல்லும் வேலையை செய்ய வேண்டிய சூழல் ரஜினிக்கு ஏற்படுகிறது.
அப்படி விநாயகன் சொன்ன அதிர்ச்சி தகவல் என்ன ? ரஜினி ஏன் விநாயகனின் கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் ? இதை எந்த சமயத்தில் ரஜினிகாந்த் சரி செய்து தனது தனது மகனின் இழப்புக்கு பழி வாங்கினார் என்பது மீதிக்கதை.

ரஜினிகாந்த் தனது பேரனுடன் விளையாடும் அளவிற்கு ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டதால் படம் முழுக்க அவருக்கான தோற்றத்தில் எந்தவித உறுத்தலும் இல்லாமல் இந்த கதாபாத்திரமாகவே அவருடன் நாமும் இணைந்து பயணிக்க முடிகிறது.

ஆனால் எத்தனை வயதானாலும் அவரது ஒவ்வொரு அசைவிலும் பேச்சிலும் அந்த ஸ்டைல் வெளிப்படுவதை மாற்றவே முடியவில்லை. தான் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என்பதை காட்சிக்கு காட்சி தனது நடிப்பால் வெளிப்படுத்தி அசர வைத்துள்ளார் ரஜினி. ஃப்ளாஷ்பேக் காட்சியில் இளமைத்துள்ளலுடன் சில நிமிடங்கள் வந்து போகும் ரஜினிகாந்த், அவரது ரசிகர்களுக்கு கிடைத்த போனஸ்.

படத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பவர் என்றார் வில்லனாக நடித்துள்ள விநாயகன் தான். இதுநாள் வரை நடித்த படங்களில் துணை வில்லனாக நடித்து வந்த இவருக்கு இந்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் டபுள் பிரமோஷன் கொடுத்துள்ளது. அதற்கு ஏற்றபடி படம் முழுவதும் ரஜினிக்கு எதிராக நின்று தாக்குப் பிடித்து வித்தியாசமான நடிப்பால் தனது கதாபாத்திரத்தை வலுவாக்கி உள்ளார் விநாயகன். ஒரு பக்கம் டெரர் வில்லனாக அதே சமயம் சில சூழ்நிலையால் காமெடியனாகவும் இருமுகம் காட்டியுள்ளார் விநாயகன்.

படத்தில் மனைவியாக ரம்யா கிருஷ்ணன், சினிமா நடிகையாக தமன்னா, மருமகளாக மிர்னா என எல்லோருமே கதாநாயகி என சொல்ல முடியாமல் கதாபாத்திரங்களாகவே அழகாக வந்து செல்கிறார்கள். தர்பார் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் ரஜினி, யோகிபாபு காமெடி களை கட்டுகிறது. குறிப்பாக இடைவேளை வரையிலான சீரியஸான படத்தை காமெடியாக நகர்த்த ரஜினியுடன் துணை நின்றுள்ளார் யோகி பாபு.

படத்தில் சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் என அனைவரும் ரஜினிக்கான கேங்ஸ்டர் குரூப்பாக சரியான இடங்களில் பயன்படுத்தப்பட்டு மாஸ் காட்டி உள்ளார்கள். அதே சமயம் தெலுங்கு நடிகர் சுனில் இந்த படத்தில் இடைவேளைக்குப் பிறகு காமெடி காட்சிகளை தன் கைவசம் எடுத்துக் கொண்டுள்ளார்.

ரஜினியின் மகனாக நடித்துள்ள வசந்த் ரவி தனது கதாபாத்திரத்தில் அழகாக பொருந்தி உள்ளார். இவரது கதாபாத்திரத்தில் இருக்கும் ட்விஸ்ட் நம்மை அதிர்ச்சி அடைய வைப்பது உண்மை. இதற்கு முன் இவர் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் கூட, இந்த ஜெயிலர் திரைப்படம் இவர் மீது மிக அதிக வெளிச்சத்தை பாய்ச்சி உள்ளது என்பது உண்மை.

ரயிலை தாங்கிப் பிடிக்கும் தண்டவாளம் போல மொத்த படத்தையும் தனது பின்னணி இசையாலும் பாடல்களாலும் தூக்கிப் பிடித்துள்ளார் அனிருத். குறிப்பாக ரஜினிகாந்த் வரும் காட்சிகளில் எல்லாம் அதிரடியான மாஸான பின்னணி இசையால் தெறிக்க விட்டுள்ளார் ரஜினிகாந்த்.

ரசிகர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு நினைவில் வைத்து ரசிக்கும் விதமாக ஏராளமான காட்சிகள் இதில் உள்ளன. ரஜினி படம் என்றாலும் மாஸ் ஆக்சன் படம் என்றாலும் நெல்சன் தனக்கே உரிய பாணியில் இந்த படத்தை அழகாக டீல் செய்திருக்கிறார். அதுதான் இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்துவிட்டது. அந்தவகையில் இந்த படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து நெல்சனும் வெற்றிகரமாக கம் பேக் கொடுத்துள்ளார்.