கடந்த 2014 ஆம் வருடம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படம் ஜிகர்தண்டா. இந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். சினிமா எடுக்க ஆசைப்படும் ஒரு இளைஞன் கேங்ஸ்டர் படம் எடுப்பதற்காக மதுரையில் நிஜமாகவே ஒரு ரவுடி கூட்டத்தை கண்காணித்து அவர்களின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள முயற்சிப்பதும் பின்னர் அந்த ரவுடி கும்பலிடம் சிக்கி அவர்களை வைத்து படம் எடுக்கும் சூழ்நிலைக்கு ஆளாவதும் என காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாகி இருந்தது.
சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் சிம்ஹாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஜிகர்தண்டா டபுளக்ஸ் என்கிற பெயரில் தற்போது இயக்கி முடித்து விட்டார் கார்த்திக் சுப்புராஜ். இதில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜிகர்தண்டா படம் வெளியாகி ஒன்பது வருடங்களை எட்டியுள்ளதை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்த நிகழ்வின்போது ஜிகர்தண்டா கேக் வெட்டி தனது குழுவினருக்கு ஊட்டி மகிழ்ந்தார்.
மேலும் ஜிகர்தண்டா படத்தின் சிறப்பு காட்சியும் திரையிடப்பட்டு ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தார் கார்த்திக் சுப்புராஜ்.