மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் மாமன்னன் என்கிற திரைப்படம் வெளியானது. இதில் நடிகர் வடிவேலு முதன்முறையாக ஒரு குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக பகத் பாஸில் நடித்திருந்தார்.

ஒரு அரசியல் தலைவர் என்றாலும் கூட ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கும் சம உரிமை அரசியலில் கிடைப்பது என்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் உருவாகி இருந்தது.

பலரது பாராட்டுக்களையும் பெற்று வெற்றி படமாக இது அமைந்தது. சமீபத்தில் இந்த படம் ஓ டி டி தளத்திலும் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை நடிகர் சிவகுமார் பார்த்துவிட்டு தனது மன உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தம்பி மாரி செல்வராஜுக்கு.. மாமன்னன் திரைப்படம் பார்த்தேன். இது படம் இல்லை.. உங்கள் வாழ்க்கையில் கண்ட வலி.. பாதிக்கப்பட்டவன் தான் இவ்வளவு ஆழமாக சொல்ல முடியும்.. திரைப்படம் மூலம் இன்னும் நீங்கள் சொல்ல வேண்டிய செய்தி நிறைய இருக்கிறது.. உங்களையும் வடிவேலுவையும் சந்தித்து ஆரத்தழுவ எண்ணுகிறேன்.. விரைவில் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.