செத்தும் ஆயிரம் பொன் என்கிற படம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா ? விமர்சன ரீதியாக பாராட்டு பெற்ற இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன். தற்போது இவரது இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘டியர்’.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இதன் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வெறும் 35 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சென்னை, இடுக்கி, குன்னூர் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகினி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ருகேஷ் படத்தொகுப்பையும், பிரகதீஸ்வரன் கலை இயக்கப் பணிகளையும், அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பையும் கவனித்து வருகின்றனர். ‘ராப்’ ஐகான் அறிவு இந்தப் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார்.
தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.