சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமன்னா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் பல மொழி திரையுலக்னகளை சேர்ந்த முக்கிய நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
வரும் ஆகஸ்டு 10ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. வரும் ஜூலை 28ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.
இதற்கு முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்தே இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முதல் பாடலாக வெளியிடப்பட்ட காவாலா என்கிற பாடல் பட்டிதொட்டி மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அதற்கு அடுத்து இரண்டாவதாக வெளியான ஹுக்கும் என்கிற பாடல் இளைஞர்களிடையே குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட பாடல் போல வெளியாகி அதுவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதைத் தொடர்ந்து மூன்றாவதாக ஜூஜூபி என்கிற பாடல் நாளை வெளியாக இருக்கிறது. இந்த ஜூஜூபி என்கிற வார்த்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 40 வருட திரையுலக பயணத்தில் பல படங்களில் குறிப்பாக 80, 90களில் நிறைய முறை பேசி ரசிகர்களுக்கு அறிமுகமான வார்த்தைதான்.
ஜூஜூபி என்றால் ஒன்றுமில்லை அல்லது வெகு சாதாரண என்பது போன்ற அர்த்தம் வரும். இந்த நிலையில் அவர் பயன்படுத்திய அந்த வார்த்தையையே ஒரு பாடலின் வரியாக்கி ஜெயிலர் படத்தில் இடம்பெறச் செய்துள்ளார்கள்.
ஏற்கனவே இரண்டு பாடல்கள் புயலை கிளப்பியது போதாது என்று இந்த ஜூஜூபி பாடல் என்ன மாயாஜாலம் செய்ய காத்திருக்கிறதோ நாளை மாலை தெரிந்து விடும்.