நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற அதிரடி ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ஒருபுறம் போஸ்ட் புரொடக்சன் பதிவுகளும் இன்னொரு பக்கம் படத்தின் புரோமோஷன் பணிகளும் துவங்கி உள்ளன.
இந்த படத்தில் மோகன்லால் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட ஜாம்பவான்கள் நடித்துள்ளனர். சுனில், விநாயகன் போன்ற மற்ற மொழி முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர்.
அந்த வகையில் தமிழில் பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதிதி மேனன் என்கிற மிர்னா தற்போது ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 47 நாட்கள் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்ததாகவும் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளதாகவும் படப்பிடிப்பின்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் உழைப்பையும் அவரது நடிப்பையும் கண்டு பிரமித்து போனதாகவும் வியப்புடன் கூறியுள்ளார் மிர்னா.
இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் படப்பிடிப்பு தளத்தில் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள மிர்னா, “போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்” என்கிற ஒரு வாசகத்தையும் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.