பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இந்த படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, வில்லனாக நடிகர் பகத் பாசில் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடித்துள்ளார்.
ஏ.ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை (ஜூன் 29) வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இரண்டு வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களிடம் மிகப்பெரிய மதிப்பையும் பெற்றுள்ள மாரி செல்வராஜின் மூன்றாவது படம் இது என்பதால் இந்த படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
அது மட்டுமல்ல வடிவேலு இந்தப் படத்தின் மூலம் ஒரு கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலமும் கூட இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
ஏற்கனவே கர்ணன் படத்தில் மாரி செல்வராஜூடன் இணைந்து பணியாற்றி மிக நெருங்கிய நட்பில் இருப்பவர் தனுஷ். அவர் நடிக்கும் இன்னொரு படத்தையும் மாரி செல்வராஜ் தான் இயக்கப் போகிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு தனுஷ் தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரி செல்வராஜின் உணர்வுப்பூர்வமான படைப்பு தான் மாமன்னன். உதயநிதி வடிவேலு இருவரும் சிறப்பாக நடிப்பை வழங்கியுள்ளனர். அது மட்டுமல்ல கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் இருவரும் கூட தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
இடைவேளை சமயத்தில் தியேட்டர்களில் தெறிக்க விட போகிறார்கள். ஏ.ஆர் ரகுமான் இசை அவ்வளவு அழகு” என்று பாராட்டியுள்ளார். இதற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பதிலில், “நன்றி தனுஷ். உங்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் மாமன்னன் படம் உருவாகி இருக்காது” என்று கூறியுள்ளார்.