90களில் மத்தியில் ஷங்கர், கமல் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய படம் இந்தியன். கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே இந்த படம் துவங்கப்பட்டு விட்டாலும் கொரோனா அலை காரணமாகவும் மற்றும் படப்பிடிப்பில் ஏற்பட்ட சில தடங்கல்கள் காரணமாகவும் இடையில் கொஞ்ச காலம் படப்பிடிப்பு நடக்காமல் கிடப்பில் இருந்தது.

அதன் பிறகு ஷங்கர் கூட தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கப் போய்விட்டார். ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றி உடனடியாக இந்தியன் 2 படத்தை மீண்டும் ஆரம்பிக்க வைத்தது.

இந்த நிலையில் இந்தப்படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் சில காட்சிகளை கமலுக்கு போட்டுக்காட்டியுள்ளார் இயக்குனர் ஷங்கர். அதை பார்த்து பிரமித்துப்போன கமல் அவருக்கு விலை உயர்ந்த கடிகாரம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

மேலும் இது குறித்து கமல் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறும்போது, “இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர்.. இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி”. என்று வாழ்த்தி உள்ளார்.