பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் ஆதிபுருஷ் என்கிற படம் வெளியானது. இதைத் தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்ததாக சலார் என்கிற படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் மகாநடி. சீதா ராமம் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் தற்போது பிரபாஸை வைத்து ப்ராஜெக்ட் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் கமல் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என கடந்த சில நாட்களாகவே செய்தி அடிபட்டு வந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக கமல் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

பட தயாரிப்பு நிறுவனமும் நடிகர் கமல்ஹாசனும் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளனர். கடந்த பல வருடங்களாகவே கமல் தமிழில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். பெரும்பாலான படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் அவர் ஒரு சில படங்களில் மட்டும் நட்புக்காக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் வேற்று மொழியில் அதுவும் ஒரு இளம் நடிகர் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கமல் முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாக இருக்கிறார் என்பதே ஆச்சரியமான தகவல் தான். அதே சமயம் இந்த படத்தின் பிரம்மாண்டத்திற்கும் அந்த கதாபாத்திரத்திற்கும் கமல் தேவைப்படுவதால் தான் அவரை மிகப்பெரிய அளவு சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.