நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவில் நிற்க நேரமில்லாமல் பல படங்களில் காமெடி நடிகராகவும் சில படங்களின் கதையும் நாயகனாகவும் மாறிமாறி நடித்து வருகிறார். கிடைக்கும் இடைவெளிகளில் ஒரு பக்கம் திரையுலக நிகழ்ச்சிகள் மற்றும் தனது குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இன்னொரு பக்கம் தனது மனம் கவர்ந்த விளையாட்டான கிரிக்கெட்டிற்கு நேரம் ஒதுக்கவும் அவர் தவறுவதில்லை.

அவர் நடிக்கும் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு தளங்களில் படக்குழுவினருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அவரது கிரிக்கெட் ஆர்வத்தை பாராட்டி சமீபத்தில் கூட நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி, தனது கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை யோகிபாபுவுக்கு பரிசளித்து இருந்தார்.

இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னப்பம்பட்டியில் ஒரு கிரிக்கெட் கிரவுண்டை நிறுவியுள்ளார். இன்னொரு நட்சத்திர கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் இன்று அதை திறந்து வைத்தார் இந்த நிகழ்வில் நடிகர் யோகிபாபுவும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் யோகிபாபு பேசும்போது, “கிரிக்கெட் வீரர் நடராஜன் இப்படி ஒரு கிரிக்கெட் கிரவுண்டை உருவாக்கி இருப்பதை பார்க்கும்போது, இதேபோல நாமும் ஒரு கிரவுண்டை உருவாக்க வேண்டும்.. நடராஜன் போல நிறைய கிரிக்கெட் வீரர்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் தான் மனதில் தோன்றுகிறது. சமீப காலமாக ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் உள்ளிட்ட போட்டிகளில் திறமையான தமிழக கிரிக்கெட் வீரர்கள் பலர் இடம் பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.