15 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சுந்தர்.சி கதாநாயகனாக அறிமுகமான படம் தலைநகரம். மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தலைநகரம் 2 என்கிற பெயரில் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாவது பாகம் ரசிகர்களை ஈர்த்ததா ? பார்க்கலாம்..
சென்னையில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மூன்று பிரபல தாதாக்கள்.. இன்னொரு பக்கம் ரவுடியிசமே வேண்டாம் என ஒதுங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சுந்தர்.சி யின் வாழ்க்கையில் இவர்கள் சம்பந்தமே இல்லாமல் குறுக்கிடுகிறார்கள். அமைதி வழியில் பயணிக்கும் சுந்தர்.சி ஆக்ரோஷமாக மாற வேண்டிய சூழல் தானாகவே உருவாகிறது. சம்பந்தமே இல்லாமல் தேடி வந்த இந்த சங்கடத்தால் சுந்தர்.சிக்கு இழப்பு ஏற்பட்டதா ? இல்லை எதிரிகளுக்கு இழப்பை ஏற்படுத்தினாரா என்பது மீதிக்கதை.
தலைநகரம் படத்தில் பார்த்த அதே போன்ற ரஃப் அண்ட் டஃப் தோற்றத்தில் படம் முழுக்க படு சீரியசான கதாபாத்திரத்தில் சுந்தர் சி கச்சிதமாக பொருந்தியுள்ளார். முதல் பாகத்திலாவது அவருக்கு காமெடி, ரொமான்ஸ் என அதிக வேலை இருந்தது. ஆனால் இதில் அடிதடி மட்டுமே பிரதானம். சுந்தர்.சியின் அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இறங்குகிறது.
படத்தில் பாகுபலி பிரபாகர் உள்ளிட்ட மூன்று விதவிதமான வில்லன்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான கதை சொல்லப்பட்டாலும் இவர்களில் பிரபாகர் தனது மிரட்டலான நடிப்பால் முன்னிலை வகிக்கிறார்.
சினிமா நடிகை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாலக் லால்வனி தனது அழகான முகத்தாலும் காதல் எக்ஸ்பிரஸன்களாலும் நம்மை கவர்கிறார். இன்னொரு கதாநாயகியாக ஆயிராவும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரத்தில் தம்பி ராமையா நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார்.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கான விறுவிறுப்பு எங்கும் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளது. முதல் பாகத்தைப் போல காமெடி, ரொமான்ஸ் கடந்த பேக்கேஜ் ஆக இல்லாதது மட்டுமே ஒரு குறையாக தெரிகிறது. மற்றபடி இயக்குனர் வி.இசட் துரை ஒரு பக்கா ஆக்சன் படத்தை போரடிக்காமல் கொடுத்திருக்கிறார். முதல் பாகம் அளவுக்கு இல்லாவிட்டாலும் இந்த இரண்டாம் பாகத்திலும் ஈர்ப்புக்கு குறைவில்லை.