சித்தார்த் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் டக்கர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் ஜி.கிரிஷ் என்பவர் இயக்கியுள்ளார். யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒரு விறுவிறுப்பான சாலை பயண படமாக உருவாகி உள்ள டக்கர் படத்திற்கு ஓரளவுக்கு டீசன்டான வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ்ஷுக்கு சொந்த ஊரான மயிலாடுதுறையில் அவருக்கு பொதுமக்களும், ரசிகர்களும் இணைந்து மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்து, நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் மயிலாடுதுறை விஜயா திரையரங்க வளாகத்தில் இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ்க்கு பாராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து திரையரங்கில் ரசிகர்களுடன் இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ் டக்கர் திரைப்படத்தை கண்டு களித்தார்
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டக்கர் திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் ஜி க்ரிஷ், “உலகம் முழுவதும் ஜூன் 9ஆம் தேதி திரையிடப்பட்டுள்ள டக்கர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு பகுதிகளில் குடும்பம் குடும்பமாக சென்று திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை இந்த படத்திற்கு வழங்கி இருக்கிறார்கள்.
குறிப்பாக எனது சொந்த ஊரான மயிலாடுதுறையில் ரசிகர்களும், பொதுமக்களும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்து எனது திரையுலக பயணத்திற்கு பாராட்டு தெரிவித்து, வாழ்த்திய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டக்கர் திரைப்படம் இக்கால தலைமுறைக்கு ஏற்ற வகையில் அனைவரது ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டு திரைக்கு வந்துள்ளது.
இதில் கதாநாயகனாக சித்தார்த் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள், தயாரித்துள்ள பேஷன் ஸ்டுடியோ மற்றும் அனைவருடைய ஒத்துழைப்போடு மிகச்சிறந்ததொரு படமாக டக்கர் திரைப்படம் ரசிகர்களுக்கு நிறைவு தரும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்