அசோக் செல்வன் சரத்குமார் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் போர் தொழில். இந்த படத்தின் கதாநாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.
இந்த படத்தை விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜூன் ஒன்பதாம் தேதி வெளியாகியுள்ள நிலையில் இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நாயகி நிகிலா விமல் பேசும்போது, “என்னை மலையாளத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் தயாரிக்கும் ‘போர் தொழில்’ படத்திலும் நடித்திருக்கிறேன். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சாரதி, ‘இயக்குநரிடம் கதையை கேளுங்கள். பிடித்திருந்தால் நடிக்கலாம்’ என கூறினார். ஒரு சின்ன கதையை சொல்கிறேன். அதற்கு முன் ஒரு குட்டி பிளாஷ்பேக்.
இயக்குநர் ஒருவர் என்னிடம் கதை சொல்ல வருகை தந்தார். லேப்டாப்பை திறந்து வைத்து, கதையை சொல்லத் தொடங்கினார். கதையை முழுவதுமாக சொல்லி முடித்தார். அதன் பிறகு நான் அவர் திறந்து வைத்த லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர், ‘லேப்டாப்பை ஒரு பில்டப்புக்காக திறந்து வைத்திருக்கிறேன். மற்றபடி அதில் எந்த விசயமும் இல்லை’ என்றார்.
இதற்கு அடுத்த நாள் தான் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை சொல்ல வந்தார். அவரும் வந்தவுடன் லேப்டாப்பை திறந்து வைத்தார். மனதில் நேற்றைய சம்பவம் ஓடியது. இருப்பினும் கதையை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எங்கிருந்தோ இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அதன் பிறகு அந்த இசை, லேப்டாப்பிலிருந்து ஒலிக்கிறது என சொன்னார். முதன் முதலாக பின்னணி இசை ஒலிக்க, கதையை சொல்லி என்னை கவர்ந்தார்.
என்னுடைய திரையுலக பயணத்தில் மிக விரைவாக நடிக்க சம்மதம் தெரிவித்த திரைப்படம் ‘போர் தொழில்’. படத்தின் கதை சிறப்பாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரத்தின் அளவைப் பற்றி கூட கவலைப்படவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறோம். அதனால் நல்லதொரு தரமான கதையுடன் திரையில் தோன்ற வேண்டும் என விரும்பினேன். அது இந்த ‘போர் தொழில்’ படத்தில் இருக்கிறது. என்றார்.