V4UMEDIA
HomeReviewகழுவேத்தி மூர்க்கன் ; விமர்சனம்

கழுவேத்தி மூர்க்கன் ; விமர்சனம்

ஜோதிகா நடித்த ராட்சசி படத்தை இயக்கிய கௌதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் இந்த கழுவேத்தி மூர்க்கன்.

கிராமத்தில் சிறுவயதிலிருந்தே மேல் ஜாதியை சேர்ந்த அருள்நிதி மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த சந்தோஷ் பிரதாப் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகு பழகுகின்றனர். அருள்நிதியின் தந்தைக்கு இது பிடிக்காவிட்டாலும் இவர்கள் நட்பை அது பாதிக்கவில்லை. ஆனால் ஊருக்குள் நுழைந்து இரண்டு சாதிக்குள்ளும் சண்டை மூட்டி அரசியல் செய்ய நினைக்கும் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவருக்கு இவர்களது நட்பு இடைஞ்சலை தருகிறது.

இதனால் அவரது மாவட்ட செயலாளர் பதவியே பறிபோகிறது. இழந்ததை மீண்டும் பெறுவதற்காக அவர் செய்யும் சூழ்ச்சியில் எதிர்பாராத விதமாக அருள்நிதியின் கையாலேயே சந்தோஷ் பிரதாப் வெட்டி கொல்லப்படுகிறார். இதனால் ஊருக்குள் பிரச்சினை வருகிறது. அருள்நிதியை போலீஸ் தேடுகிறது.

அருள்நிதி எதற்காக சந்தோஷ் பிரதாபை கொன்றார் ? உண்மையில் அவர்தான் சந்தோஷை கொன்றாரா ? இதன் பின்னணியில் என்ன நடந்தது ? இதில் அந்த அரசியல் பிரமுகர்களின் பங்கு என்ன ? இதற்கெல்லாம் விடை சொல்கிறது மீதி படம்.

இருவேறு சமூகங்கள், அவர்களிடையேயான சாதியப் பாகுபாடு, ஒரே சமூகத்தின் இரண்டு பிரிவுகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகள், தங்களைச் சுற்றியிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை காட்சிப்படுத்தியதில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ மற்ற வழக்கமான கிராமத்து கதைகளிலிருந்து விலகி நிற்கிறது.

கோபக்கார வாலிபனாக அருமையாக நடித்திருக்கிறார் அருள்நிதி. கதாபாத்திரத்தை புரிந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு நகரத்து இளைஞன் கதாபாத்திரங்களும் சரி கிராமத்து இளைஞன் கதாபாத்திரமும் சரி கட்சிதமாக பொருந்தி விடுகிறது ஆச்சரியம்தான் குறிப்பாக ஆக்ஷனில் பின்னி எடுக்கிறார் அருள்நிதி

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி பேசும் சந்தோஷ் பிரதாப்பின் நடிப்பு சிறப்பு. சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை அடுத்து இந்த படத்திலும் அருமையாக நடித்திருக்கிறார்.

சார்பட்டா புகழ் துஷாரா விஜயன். அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். சாயா தேவி, முனிஷ்காந்த், யார் கண்ணன், ராஜசிம்மன் ஆகியோரின் நடிப்பையும் பாராட்டியே ஆக வேண்டும்.

மொத்தத்தில் வழக்கமான கிராமத்து கதைக்கான திரைக்கதை மொழி கையாளப்பட்டிருந்தாலும், உள்ளடக்கத்திலும் சொல்ல முனைந்திருக்கும் விஷயங்களிலும் படம் புதுமை சேர்த்திருக்கிறது.

Most Popular

Recent Comments