நடிகர் கமல்ஹாசன் அரசியலில் நுழைவதாக அறிவித்த பின்பு அவரது திரையுலக பயணத்தில் சற்று சுணக்கம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் கடந்த வருடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து சினிமாவில் மீண்டும் முழு கவனம் செலுத்த துவங்கியுள்ளார் நடிகர் கமல்.

அந்த வகையில் ஏற்கனவே ஷங்கருடன் இணைந்து பணியாற்றி வந்த இந்தியன் 2 படத்தையும் முடித்துக் கொடுத்து விட்டார். அடுத்ததாக மணிரத்னம் மற்றும் ஹெச்.வினோத் ஆகியோரின் டைரக்ஷனிலும் நடிக்க இருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க தனது ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மூலமாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து படங்களையும் தயாரிக்க தொடங்கியுள்ளார் கமல்.

அந்த வகையில் ஏற்கனவே சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஆகியோர் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தின் வேலைகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டன.

அதைத்தொடர்ந்து சிம்புவை வைத்து ஒரு படம் தயாரிப்பதாகவும் அதை இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்குவதாகவும் ஒரு அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இந்த நிலையில் இது குறித்து அப்டேட் தகவல் ஒன்றை ராஜ்கமல் ஃபிலிம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி சிம்பு நடிக்கும் 48வது படமாக உருவாகும் இந்த படத்தின் முன் கட்ட வேலைகள் தற்போது தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன என்றும் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 56வது படம் என்பதும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து தேசிங் பெரியசாமி இயக்கும் இரண்டாவது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.