நடிகர் அஜித் ஒரு பக்கம் சினிமாவில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கவனம் செலுத்தி வந்தாலும் இன்னொரு பக்கம் தனது மனதுக்கு நெருக்கமான பைக் சாகச பயணங்களில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். ஒவ்வொரு படத்தில் இருக்கும்போதும் கிடைக்கும் இடைவெளி நாட்களில் வட மாநிலங்களில் பக்கத்து நாடுகளில் பைக் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் அஜித்.
இந்த வயதிலும் அவரது பைக் பயண ஆர்வம் குறைந்தது இல்லை. தான் செல்லும் பைக் பழைய பாதையின் சுற்றுப்பயண திட்ட வரைபடம் முதற்கொண்டு வெளியிட்டு தனது செயல்பாடுகளை தொடர்ந்து அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னை போன்றே பைக் பயணங்கள் மேற்கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் விதமாக ஏகே மோட்டோ ரைடு என்கிற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை துவங்கியுள்ளார் அஜித்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும்போது, “இந்த மேற்கோளை நான் நீண்ட காலமாக விரும்பி வாழ்ந்து வருகிறேன். ‘வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்’.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride) என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும். பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும். தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள். என்று கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது மோட்டார் பைக் சாகச பயணங்கள் மேற்கொள்ளும் சாகச விரும்பிகளுக்கும் உற்சாகம் அளித்துள்ளது.