சமீபத்தில் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பொதுமக்கள் வங்கியில் செலுத்தி வேறு நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதன் பிறகு 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருக்காது என்றும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பும் இந்த வாரம் வெளியான பிச்சைக்காரன் இரண்டு படமும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய பரபரப்பை சோசியல் மீடியாவில் ஏற்படுத்தி விட்டன.
காரணம் பிச்சைக்காரன் படம் 2016ல் வெளிவந்த சமயத்தில்தான் பழைய 500 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து அதற்கு பதிலாக புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு உத்தரவின் படி அறிவித்தது ரிசர்வ் வங்கி.
பிச்சைக்காரன் படத்தில் கூட 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து விட்டால் ஊழல் ஒழியும் என்கிற கருத்தும் சொல்லப்பட்டிருந்தது. அதனாலயே அந்த படம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் பிச்சைக்காரன் 2 படம் விஜய் ஆண்டனி இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியானது. அதே தினத்தில் தான் 2000 ரூபாய் நோட்டுகள் வரும் செப்டம்பருக்கு மேல் செல்லாது என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
இப்படி விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படம் இரண்டு பாகங்களாக வெளியானபோதும் ரூபாய் நோட்டு செல்லாது என்கிற அறிவிப்பு வெளியானது. ஏது இச்சையாக நடந்த விஷயம் என்றாலும் மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது. இது குறித்து சோசியல் மீடியாவில் பலரும் தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியிடம் இந்த 2000 ரூபாய் நோட்டு மாற்றம் குறித்து கேட்கப்பட்ட போது, அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி, “இதை மக்களுடைய நலனுக்காகத்தான் செய்திருக்கிறார்கள். யாரெல்லாம் அளவுக்கு அதிகமாக பணத்தை வைத்து பதுக்கி வைத்திருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இதனால் பாதிப்பு. அதாவது பிகிலிகளுக்கு தான் பாதிப்பு. ஆன்ட்டி பிகிலிகளுக்கு பாதிப்பு இல்லை. பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தான்” என்று கூறியுள்ளார்.
இந்த பிச்சைக்காரன்-2 படத்தில் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் நபர்களை அவர் பிகிலி என்றும் தன்னுடைய சொத்துக்களை மக்களின் நலனுக்காக செலவழிப்பவர்களை ஆன்ட்டி பிகிலி என்கிற வார்த்தையிலும் குறிப்பிட்டிருந்தார் விஜய் ஆண்டனி. அதை மையப்படுத்தியே தற்போது தனது கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் விஜய் ஆண்டனி.