கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பர்ஹானா படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஒரு பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு படங்கள் குறித்து பேசினார். அப்போது புஷ்பா படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் போன்று முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளில் நடிக்க விரும்புவதாக கூறினார்.
ஆனால் அவர் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் ராஷ்மிகாவை விட நான் நன்றாக நடித்திருப்பேன் என்று கூறியதாக சோசியல் மீடியாவில் செய்தி பரவியது. அதை தொடர்ந்து தான் அப்படி எதுவும் தவறாக கூறவில்லை என்றும் ராஷ்மிகா மீதும் அவரது உழைப்பு மற்றும் நடிப்பு மீதும் மதிப்பு வைத்திருப்பதாகவும் தான் சொன்ன விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்றும் ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்த நிலையில் இப்படி ஒரு அறிக்கை வெளியாகி இருப்பதை பார்த்துவிட்டு நடிகை ராஷ்மிகா மந்தனா அது குறித்து தனது ட்விட்டர் பதிவில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஆறுதல் அளிப்பது போல பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது அன்பே இப்போதுதான் இது பற்றி பார்த்தேன்.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் நன்றாக புரிந்து கொண்டேன். இதுபற்றி நமக்குள் எந்த விளக்கமும் தேவையில்லை என நினைக்கிறேன். உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் ஃபர்ஹானா படத்திற்கு எனது அன்பான வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக ஒரு கதாநாயகி பற்றி இன்னொருவர் தவறாக சொல்லி விட்டதாக செய்திகள் வெளியானால் அவர்களுக்குள் மேலும் விரிசல் விழுவது தான் வழக்கம். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷும் சரி அதைத்தொடர்ந்து தற்போது ராஷ்மிகாவும் சரி இந்த சர்ச்சையை அழகாக கையாண்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது.