தமிழில் கடந்த பல வருடங்களாக நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.
இது சம்பந்தமாக புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படி சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது புஷ்பா படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு பற்றி விமர்சித்து பேசியதாக ஒரு செய்தி ஊடகங்களில் வெளியானது.
ஆனால் இது உண்மை அல்ல நான் அப்படி ராஷ்மிகா பற்றி தவறாக எதுவும் பேசவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும்போது, “என்னிடம் தெலுங்கு திரை உலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்கையில் எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன். உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதில் அளித்தேன்.
இருப்பினும் துரதிஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒருபோதும் குறை கூறவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.
ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும் திரையுலகை சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்,.
என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் விளக்கம் அளித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.