விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சசி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் பிச்சைக்காரன். இந்த நிலையில் வெற்றி படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கும் வரிசையில் பிச்சைக்காரன் படத்திற்கும் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய சசி இந்த படத்தை இயக்க முடியாத சூழல் இருந்ததால் ஆச்சரியமாக நடிகர் விஜய் ஆண்டனியே இந்த படம் மூலமாக இயக்குனராக களம் இறங்கியுள்ளார். அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு அவரே படத்தொகுப்பும் செய்துள்ளார்.
இந்த படம் வரும் மே 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் பேசும்போது படத்தின் கதாநாயகிக்கு (காவ்யா தாப்பர்) என்னுடைய முதல் வணக்கம். என்னுடைய குருநாதர் பாரதிராஜா இருக்கும்போது ஏன் அவருக்கு முதல் வணக்கம் என்றால், விஜய் ஆண்டனி கடலில் விழுந்தபோது முதலில் குதித்து காப்பாற்றியவர் அவர்தான்.
அர்ஜூன் என்ற அசிஸ்டெண்ட் கேமரா பர்சனும் காப்பாற்றி இருக்கிறார். நான் முதலில் விஜய் ஆண்டனியை பார்த்தபோது அமைதியாக இருந்தார். பிறகு இசையமைப்பாளர், நடிகர், பாடலாசிரியர், இயக்குநர் என அவர் வளர்ந்து நிற்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்.
உண்மைதான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்த போது படகு விபத்தில் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து சீரியஸான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். கிட்டத்தட்ட அவருக்கு இது மறுபிறவி என்பது போலத்தான். அந்த நேரத்தில் படத்தின் நாயகி காவ்யா தாப்பர் துணிச்சலாக செயல்பட்டு அவரை காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.