
நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலான நடிகை ஜோதிகா சில வருட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்கிற படம் மூலமாக வெற்றிகரமாக ரீ என்ட்ரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து கதையின் நாயகியாக முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக ராட்சசி, காற்றின் மொழி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு பாராட்டு பெற்றது, இதைத்தொடர்ந்து மீண்டும் தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தும் விதமாக மலையாளம் மற்றும் ஹிந்தியில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஜோதிகா.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஹிந்தியில் அஜய் தேவகன், மாதவன் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் ஜோதிகா.

சூப்பர் நேச்சுரல் தில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை விகாஸ் பாய் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தை நடிகர் அஜய் தேவ்கனே தயாரிக்கிறார் ஜூன் மாதம் துவங்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, முசோரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

இதற்கு முன்னதாக டும் டும் டும், பிரியமான தோழி மற்றும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான மகளிர் மட்டும் ஆகிய படங்களில் மாதவனுடன் இணைந்து நடித்த ஜோதிகா, கிட்டத்தட்ட ஆறு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.