Home Review மியூசிக் ஸ்கூல் ; விமர்சனம்

மியூசிக் ஸ்கூல் ; விமர்சனம்

எந்த மொழி ஆனாலும் இசை பற்றி வெகு சில படங்களே வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலும் நாயகனோ, நாயகியோ இசையை கற்றுக்கொண்டு அதில் பெரிய ஆளாகி சினிமாவில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டுவது அல்லது கர்நாடக சங்கீதத்தில் பெரிய ஆளாவது என இப்படித்தான் படங்கள் வந்துள்ளன.

சிறுவர்களை மையப்படுத்தி அதிலும் குறிப்பாக அவர்களுக்கு தொடர்ந்து படிப்பதனால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இசை எப்படி உதவுகிறது என்பது குறித்து முதன்முறையாக வெளிவந்துள்ள படம் என்று சொல்லும் விதமாக வெளியாகி உள்ள படம்தான் இந்த மியூசிக் ஸ்கூல்.

பள்ளி ஒன்றில் மியூசிக் டீச்சராக பணியில் சேர்கிறார் ஸ்ரேயா. ஆனால் அங்குள்ள மற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு படிப்பு படிப்பு என அழுத்தம் கொடுப்பதால் இசையை கற்றுக்கொடுக்க அங்கே வாய்ப்பே இல்லாமல் போகிறது. இதனால் ஸ்ரேயா அந்தப்பள்ளியில் பணியாற்றும் நாடக ஆசிரியரான ஷர்மான் ஜோஷி என்பவருடன் இணைந்து தாங்கள் தங்கியிருக்கும் அபார்ட்மெண்டிலேயே மியூசிக் ஸ்கூல் ஒன்றை ஆரம்பிக்கிறார்கள்.

இசையுடன் சேர்த்து நாடகத்தையும் கற்றுக் கொடுப்பதுதான் அவர்களது நோக்கம். அந்த அபார்ட்மெண்டில் உள்ள சிலர் தங்களது குழந்தைகளை இந்த மியூசிக் ஸ்கூலில் சேர்க்கிறார்கள். சிட்டி கமிஷனரான பிரகாஷ்ராஜின் மகள் கூட இந்த பள்ளியில் ஆர்வமாக வந்து சேர்கிறார்.

விரைவில் இசை ட்ராமா ஒன்றை நடத்த முடிவு செய்யும் ஷர்மான் ஜோஷி மற்றும் ஸ்ரேயா இருவரும் கோவாவிற்கு சென்று அங்கே உள்ள ஸ்ரேயாவின் வீட்டில் தங்கி மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி கொடுக்கலாம், ரிகர்சல் பார்க்கலாம் என முடிவு செய்கிறார்கள். அதன்படியே அங்கே சென்றும் ரிகர்சல் செய்ய துவங்குகின்றனர்.

ஆனால் பிரகாஷ்ராஜின் மகளுக்கும் இவர்கள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி மகனான நேபாளியைச் சேர்ந்த மாணவனுக்கும் இடையே இனக்கவர்ச்சி ஏற்பட்டு காதல் ஆக மாறுகிறது. இதனால் எதிர்பாராத விதமாக ஒரு சிக்கல் ஏற்பட இது ஹைதராபாத்தில் இருக்கும் அப்பா பிரகாஷ்ராஜ் வரை செல்கிறது.

இந்த பிரச்சனையை ஷர்மான் ஜோஷி சரியா இருவரும் சமாளித்து, வெற்றிகரமாக தாங்கள் நினைத்தபடி அந்த இசை நாடகத்தை நடத்துகிறார்களா என்பது கிளைமாக்ஸ்.

இந்தி மற்றும் தெலுங்கை குறி வைத்து எடுக்கப்பட்டதாலோ என்னவோ படத்தின் கதையும் காட்சிகளும் கொஞ்சம் ஹைடெக் ஆகவே இருக்கிறது. நம்மைப் போன்ற தமிழ் ரசிகர்களுக்கு இது கொஞ்சம் அந்நியப்பட்டு தெரியும். அதே சமயம் இந்த படம் இன்றைய இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தையும், பள்ளி குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மியூசிக் ஸ்கூல் டீச்சராக ஸ்ரேயா வெகு பொருத்தமான கேரக்டரில் தன்னை பொறுத்துக் கொண்டுள்ளார். அதேபோல அவருக்கு இணையாக நாடக ஆசிரியராக வரும் ஷர்மான் ஜோஷி கூட நானும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபிக்கிறார்.

இவர்களுடன் சேர்ந்து கொண்டு வெவ்வேறு வயதுள்ள குழந்தைகள் அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கின்றன. ஆனால் படிப்பு ஒன்றே குறியென குழந்தைகளை போட்டு படுத்தும் அவர்களது பெற்றோர்களின் செயல்கள் அவர்கள் மீது நமக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றன.

கமிஷனர் ஆக வரும் பிரகாஷ்ராஜ் கூட தனது மகளை கண்டிப்பாக வளர்க்க முற்படுவதும் படிப்பு மிஷினாக அவரை கருதுவதும் இன்றும் பிற்போக்குத்தனம் கொண்ட அதிகாரிகள் பலர் இருக்கிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு. அதே சமயம் பிரகாஷ்ராஜின் அம்மாவாக நடித்துள்ள லீலா சாம்சன் இன்றைய குழந்தைகளின் மன ஓட்டத்தை கணித்து அதற்கு ஏற்றபடி எப்படி சிந்திக்க வேண்டும் என தனது செயல்களால் பாடம் எடுக்கிறார்.

இளையராஜாவின் இசையில் பல இடங்களில் பாடல்கள் ரசிக்க வைப்பதோடு நம்மை ரிலாக்ஸ் செய்யவும் வைக்கின்றன. இன்றைய சூழலில் இதுபோன்று தங்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தி படிக்க வைக்கும் பெற்றோர்கள் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால் இது குழந்தைகளுக்கான படம்.. பெற்றோர்களுக்கான பாடம்