HomeReviewஇராவணக்கோட்டம் ; விமர்சனம்

இராவணக்கோட்டம் ; விமர்சனம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் கதை. சுத்துப்பட்டில் இருக்கும் 16 கிராமங்களுக்கு மிகப்பெரிய தலைக்கட்டாக இருப்பவர் பிரபு. மேலத்தெருவை  சேர்ந்த அவருக்கு கீழத்தெருவை சேர்ந்த இளவரசு நண்பராக இருக்கிறார். மேலத்தெரு சாந்தனுவும் இளவரசன் மகன் சஞ்சயும் ஜாதி பார்க்காமல் நண்பராக பழகுகிறார்கள், சஞ்சயின் மாமன் முருகன் இந்த இரண்டு தரப்பினருக்குள்ளும் எப்படியாவது பகை மூட்ட முயற்சிக்கிறார்.

இன்னொரு பக்கம் பிரபுவின் ஆதரவால் எம்எல்ஏ ஆன அருள்தாஸ், அமைச்சர் தேனப்பனின் உத்தரவின்படி அந்த ஊருக்குள் தன் கட்சியின் செல்வாக்கை நிலை நாட்ட முயற்சிக்கிறார். பிரபு அதற்கு தடை போட, சஞ்சயின் மாமன் உதவியை நாடுகிறார் அருள்தாஸ்.

அந்த ஊர் திருவிழாவிற்கு சென்னையில் இருந்து தாயுடன் வருகிறார் கயல் ஆனந்தி. அவருக்கும் சாந்தனுவுக்கும் 5 வருடங்களுக்கு மேலாக காதல் தொடர்கிறது. இதை அறியாத சஞ்சய், ஆனந்தி மீது காதல் வசப்படுகிறார். இதை பயன்படுத்தி சஞ்சயின் மாமன் முருகன், நண்பர்கள் இருவருக்கும் பிரிவு ஏற்படும் விதமாக சஞ்சயை தூண்டிவிட அவர் எதிர்பார்த்தது நடக்கிறது.

இந்த நிலையில் தங்களது கிராமங்களில் தண்ணீர் பிரச்சினை தீர்வதற்காக பிரபு மற்றும் இளவரசு ஆகியோர் முயற்சி எடுக்க, பின்னணியில் சதி செய்யும் கார்ப்பரேட் மாஃபியாக்களால் அநியாயமாக உயிர் விடுகின்றனர். இதைத் தொடர்ந்து கீழத்தெரு மேலத்தெரு மீண்டும் இரண்டாக பிரிகிறது.

மீண்டும் இவர்களால் ஒன்று சேர முடிந்ததா ? ஒன்று சேர்ந்தார்களா ? சாந்தனு சஞ்சய் இவர்கள் விரோதம் முடிவுக்கு வந்ததா என்பது மீதிக்கதை.

கதாநாயகன் சாந்தனு இதுவரை தான் நடித்த படங்களிலிருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டு தெரிகிறார். நடிப்பிலும் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. ஒரு கிராமத்து இளைஞனுக்கு உரிய விறைப்பும் வீராப்புமாக தனது கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அழகாக பொருந்தி உள்ளார். இன்னும் சொல்லப்போனால் பயன்படுத்தப்படாமல் இருந்த சாந்தனுவின் திறமைகளை இயக்குனர் விக்ரம் சுகுமாரன் அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளார் என்று சொல்லலாம். இனி நல்ல கதை வைத்திருக்கும் இயக்குனர்கள் சாந்தனுவை நோக்கி படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

கிராமத்து குயில் என்று சொல்லும் அளவிற்கு நாயகி கயல் ஆனந்தி தனது க்யூட்டான நடிப்பால், அழகால் படம் முழுக்க நம்மை கவர்கிறார். புதியவரான நடிகர் சஞ்சய்க்கும் சாந்தனுவுக்கு நிகரான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். நட்பில் இருந்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக விலகி பகையாளியாக மாறும் அந்த வித்தியாசத்தை நடிப்பில் அழகாக காட்டியுள்ளார். இறுதியில் அதில் எடுக்க முடிவு நம் மனதை கனக்க வைக்கிறது.

இந்த கதாபாத்திரத்தில் பிரபுவை விட்டால் வேறு யாரும் அவ்வளவு பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று சொல்வது போல ஊர் தலைவர் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தி உள்ளார். நடிகர் இளவரசுவும் குணச்சித்திர நடிப்பில் தன் கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார்.

அரசியல்வாதிகளாக வரும் அருள்தாஸ் மற்றும் தேனப்பன் இருவருமே மிக பொருத்தமான தேர்வு. அவர்கள் அரசியல் ரீதியாக காய் நகர்த்தும் விதம் சேர்ந்த அரசியல்வாதிகளாகவே அவர்களை காட்டுகிறது. இவர்களை எல்லாம் தாண்டி சஞ்சயின் மாமனாக வரும் முருகன் ஒற்றை கையுடன்  தான் செய்யும் சூழ்ச்சிகளால் மகாபாரத சகுனி போலவே நமக்கு காட்சியளிக்கிறார். அந்த விதமாக எதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார். படவென பட்டாசாக பொரிந்து தள்ளும் தீபாவும் நடை உடை பாவனையிலேயே கித்தாப்பு காட்டும் சுஜாதாவும் கலகலப்பூட்டுகின்றனர்.

கிராமத்து மக்களின் எதார்த்த வாழ்வியலையும் கருவேலங்காட்டு பூமியில் வசிக்கும் மக்களின் அவலத்தையும் தனது அற்புதமான ஒளிப்பதிவால் நமக்குள் கடத்துகிறார் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன். ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலம்.

பல வருடங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிஜமான நிகழ்வு ஒன்றை மையப்படுத்தி இந்த கருவேலங்காட்டு அரசியலை சரியான விதத்தில் பேசி உள்ளார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் நிச்சயம் ஜாதிக்கு எதிரான படம் அல்ல. அனைவரும் எப்படி சமமாக பழக வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இரண்டு மணி நேரம் எடுக்கப்பட்டுள்ள ஒரு அற்புதமான பாடம் என்று தாராளமாக சொல்லலாம்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments