எண்பதுகளிலேயே தமிழ் சினிமாவில் நுழைந்து விட்டாலும் 90களில் வெளியான புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் படங்கள் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகர் சரத்குமார். தொடர்ந்து சேரன் பாண்டியன், நாட்டாமை, சூரியன் நட்புக்காக, சூரிய வம்சம் என தனது பெயர் சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய ஹிட் படங்களையும் நடித்தார்.
இடையில் ஹீரோவுக்கான வாய்ப்புகள் சற்றே குறைந்த சமயத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்கிற கட்சியை துவங்கி அரசியலிலும் கால் பதித்தார். பின்னர் அரசியலில் பட்டும் படாமல் இருந்து கொண்டே மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்திய சரத்குமாருக்கு நல்ல வாய்ப்புகள் நிறைய தேடி வந்தன.
அந்த வகையில் சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன், ருத்ரன் ஆகிய படங்கள் சரத்குமாருக்கு என தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபிக்கும் படங்களாக அமைந்தன. அதுமட்டுமல்ல தற்போது தமிழ் சினிமாவிலேயே அதிக படங்களில் நடித்து வரும் நடிகர் என்றால் சரத்குமார் என்றுதான் சொல்லலாம். கிட்டத்தட்ட 20 படங்கள் வரை அவர் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, கன்னடம் இவற்றிலும் நடித்துவரும் சரத்குமார் இந்தியிலும் முதல்முறையாக கால் பதித்துள்ளார். அது குறித்து அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார்.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் மற்றும் ருத்ரன் ஆகிய படங்களில் தனது நடிப்பிற்கு கிடைத்த வரவேற்பைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் சரத்குமார்.
அப்போது நிருபர்களின் கேள்விக்கு சளைக்காமல் பதில் கூறிய சரத்குமார் சூப்பர் ஸ்டார் விவகாரம், ஆன்லைன் ரம்மி விளம்பரம், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல், பொன்னியின் செல்வன் கிளைமாக்ஸ் சர்ச்சை உள்ளிட்ட பல விஷயங்களுக்கு பதில் அளித்தார்.